கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி-மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆனைமலை அருகே கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆனைமலை
ஆனைமலை அருகே கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருப்பு பணம்
கோவை காந்திபுரம் ராம் நகரை சேர்ந்தவா் பிரவீன்குமார் (வயது 34). வங்கிகளில் கடன் உதவி பெற்று தரும் பங்குதாரராக உள்ளார். இவரிடம் கடன் பெற்றுள்ள திருவேங்கடசாமி என்பவர் தனக்குத் தெரிந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும் என்று தெரிவித்தார். பணத்துக்கு ஆசைப்பட்ட பிரவீன்குமார், திருவேங்கடசாமி 2 பேரும் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் ரூ.1 லட்சத்துடன் காத்திருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 போ் அங்கு வந்து, பிரவீன் குமார் மற்றும் திருவேங்கடசாமியிடம் பேசினர். இதில் தங்களிடம் ரூ.2 லட்சம் கருப்பு பணம் உள்ளது. அதனை பெற்றுக்கொண்டு தங்களிடம் உள்ள ரூ.1 லட்சத்தை தரும்படி கேட்டு உள்ளனர். இதனை நம்பிய பிரவீன்குமார் தன்னிடம் இருந்து ரூ.1 லட்சத்தை, அந்த நபர்கள் 2 பேரிடம் கொடுத்தார்.
வெள்ளை நிறத்தில்...
மேலும் அவர்களிடம் இருந்து கருப்பு நிற பையோடு ரூ.2 லட்சம் கருப்பு பணத்தை பிரவீன் குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த நபர்கள் 2 பேரும் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டனர். அவர்கள்சென்றதும் கருப்பு பையை பிரவீன்குமார் பிரித்து பார்த்தார். அப்போது அதில் 4 கட்டுகளில் மேல் புறம் மற்றும் கீழ் புறம் பகுதியில் ரூ.500 நோட்டுகள் இருந்தன. அந்த கட்டுகளை எண்ணியபோது வெள்ளை நிற காகிதங்கள் இருந்தது. இதனால் பிரவீன்குமார் மற்றும் திருவேங்கடசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நூதன முறையில் ஏமாற்றப்பட்டது குறித்து பிரவீன்குமார் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார்.
வீடியோ வைரல்
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த ரூபாய் நோட்டுகள் மோசடி குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் ஆனைமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.