மின்வாரிய ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
ரூ.40 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி மின்வாரிய ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பீளமேடு
ரூ.40 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி மின்வாரிய ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மின்வாரிய ஊழியர்
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 51). இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தொழில் தொடங்க விரும்பினார். அதற்கு வங்கியில் கடன் பெற முடிவு செய்தார். அதற்காக பல இடங்களில் முயற்சி செய்தும் கடன் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கடன் வேண்டும் என்றால் அணுகவும் என்ற ஒரு அறிவிப்பை லட்சுமணன் பார்த்தார். உடனே அவர் அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர், லட்சுமணனிடம் என்ன வேலை செய்கிறீர்கள், சம்பளம் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார்.
ரூ.40 லட்சம் கடன்
பின்னர் உங்களுக்கு உடனடியாக என்னால் கடன் வாங்கி கொடுக்க முடியும். எவ்வளவு கடன் வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு லட்சுமணன், தொழில் தொடங்க ரூ.40 லட்சம் கடன் வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்கு அவர் நான் அந்த தொகையை வாங்கி கொடுக்கிறேன், ஆனால் எனக்கு கமிஷனாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் எப்போது எனக்கு கடன் கிடைக்கும் என்று கேட்டதற்கு, நீங்கள் கோவை வாருங்கள், விமான நிலையம் அருகே வந்ததும் எனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள், நான் வந்து உங்களை அழைத்துச்செல்கிறேன் என்று கூறி உள்ளார்.
கோவை வந்தார்
இதையடுத்து லட்சுமணன் நேற்று முன்தினம் தனது நண்பர்களான ஸ்டீபன், நாகராஜ் ஆகியோருடன் கோவை வந்தார். பின்னர் அவர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் விமான நிலையம் அருகே இருப்பதாக கூறினார். அங்கேயே இருங்கள் நான் உடனே வந்துவிடுகிறேன் என்று கூறினார்.
சிறிது நேரத்தில் லட்சுமணன் உள்பட 3 பேரும் நின்ற இடத்துக்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர், லட்சுமணனிடம், நான்தான் உங்களிடம் பேசுனது, உங்களுக்கு ரூ.40 லட்சம் கடன் தயாராகி விட்டது. நீங்கள் கையெழுத்து மட்டும்தான் போட வேண்டும். எனவே நாம் பேசியபடி எனக்கு கமிஷன் தொகையை கொடுங்கள் என்று கேட்டு உள்ளார்.
ரூ.1½ லட்சம் மோசடி
உடனே அவர் தன்னிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அந்த நபரிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர், உங்களை கடன் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்லுகிறேன், எனக்கு இப்போது சிறிய வேலை இருக்கிறது அதை முடித்து விட்டு வருகிறேன்.அதுவரை இங்கு காத்திருங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன், அந்த நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் அவருக்கு அந்த நபர் தனக்கு கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது.
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
இது குறித்து லட்சுமணன், பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.