கிளீனிக்கில் ரூ.1½ லட்சம் மோசடி; மேலாளர் கைது
கோவையில் கிளீனிக்கில் ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை
கோவையில் கிளீனிக்கில் ரூ.1½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோல், முடி சிகிச்சை கிளீனிக்
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 42). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரத்தில் தோல் மற்றும் முடி சம்மந்தமான சிகிச்சை அளிக்க கிளீனிக் தொடங்கினார். இதன் கிளைகள் ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை, சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் வேலூரில் உள்ளன.
இந்த கிளீனிக்கில் ஆர்.எஸ்.புரம் கண்ணுசாமி ரோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) என்பவர் மண்டல மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த மே மாதம் முதல் பாலகிருஷ்ணன் வேலைக்கு வரவில்லை. மேலும் அவர் கிளீனிக்கில் ரூ.1.60 லட்சம் மோசடி செய்ததும் தினேசுக்கு தெரியவந்தது. இது குறித்து தினேஷ் அவரிடம் கேட்டபோது, சிறிது நாட்கள் கழித்து பணத்தை திருப்பி கொடுப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலாளர் கைது
இதற்கிடையே சேலம் கிளையில் வேலை பார்த்த சேலத்தை சேர்ந்த கிஷோர்குமார் மற்றும் நுங்கம்பாக்கம் கிளையில் பணியாற்றிய பிரேமலதா (37) ஆகியோருடன் இணைந்து பாலகிருஷ்ணன் புதிய கிளீனிக் ஒன்றை தொடங்கியதாக தெரிகிறது. மேலும் தினேஷ் கிளீனிக்கிற்கு செல்லும் வாடிக்கையாளர்களிடம் பேசி தனது கிளீனிக்கிற்கு பாலகிருஷ்ணன் வரவழைத்துள்ளார். மேலும் மோசடி செய்த ரூ.1.60 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தினேஷ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டல மேலாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் கிஷோர் குமார், பிரேமலதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.