நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் கொள்ளை
கோவையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
கோவையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் விஸ்வநாதன் (வயது 49). இவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை-அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகன் முகுந்த் சந்திரன் (23). என்ஜினீயரிங் மாணவர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முகுந்த் சந்திரன் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அன்றைய தினம் இரவு அவர் அங்கேயே தங்கிவிட்டார்.
26½ பவுன் நகைகள் கொள்ளை
இதையடுத்து மறுநாள் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலி, மோதிரம், கைச்செயின் என 26½ பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், கேமரா-1 உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மர்ம நபர்களி கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மர்ம நபர்கள் 2 பேர் தங்களது முகங்களை மறைத்து கொண்டு ஒப்பந்ததாரர் வீட்டிற்கு வருகின்றனர். அதில் ஒருநபர் ஹெல்மெட் அணிந்துள்ளார். இதனால் அவர்களின் முகம் சரியாக தெரியவில்லை. திடீரென மர்ம நபர்கள் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.