ரூ.1.31 கோடி ஊழல் குற்றச்சாட்டு: ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை


ரூ.1.31 கோடி ஊழல் குற்றச்சாட்டு: ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x

சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் விழுப்புரம், புதுக்கோட்டை உள்பட 9 இடங்களிலும் இந்த சோதனை நீடித்தது.

சென்னை,

சென்னை அறிவியல் நகரத்தில் துணை தலைவராக பணியாற்றி வருபவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக 28-2-2018 முதல் 29-10-2020 வரை பணியாற்றினார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேவையான சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி ரசீது, இதர கட்டணங்களுக்கான 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரசீது புத்தகங்களை அச்சடிப்பதற்கு, விதிமுறைகளுக்கு மாறாக கிரெசன்ட் டிரேடர்ஸ், நாகா டிரேடர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, ரூ.1.31 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரி மலர்விழி மீது ஊழல் புகார் கூறப்பட்டது.

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சங்க அச்சகத்தில்தான் இதுபோன்ற ரசீது புத்தகங்கள் அச்சிடுவது வழக்கம். அதுதான் தரமாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.

ஆனால் கூட்டுறவு சங்க அச்சகத்தில் மேற்கண்ட ரசீது புத்தகங்களை அச்சடிக்காமல் மேற்கண்ட தனியார் நிறுவனங்களில் அச்சிட கொடுத்து ஊழல் புரிந்தார் என்பதும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு தேவையான ரசீதுகள்தான் வழக்கமாக அச்சிடப்படும். ஆனால் அதற்கு மாறாக 15 ஆண்டுகளுக்கு தேவையான ரசீது அச்சிடப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு-சோதனை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். அதில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால், அதிகாரி மலர்விழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

கிரெசன்ட் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் தாகீர்உசேன், நாகா டிரேடர்ஸ் உரிமையாளர் வீரய்யா பழனிவேலு ஆகியோர் மீதும் வழக்கு பதிவானது.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக அதிகாரி மலர்விழியின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை விருகம்பாக்கம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மலர்விழியின் வீட்டில் அவரது முன்னிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் காலையில் தொடங்கி தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

மேலும் வழக்கில் சிக்கிய தாகீர்உசேன், வீரய்யா பழனிவேலு ஆகியோரின் சென்னை வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

புதுக்கோட்டை

ஒப்பந்ததாரர் வீரய்யா பழனிவேலுவின் வீடு புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தில் உள்ளது. அங்குள்ள அவரது 2 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதேபோல புதுக்கோட்டை அசோக்நகர் அருகே உள்ள பொன்னகர் பகுதியில் தாகீர் உசேனின் வீடு உள்ளது. அங்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டையில் 3 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையானது மாலை வரை நீடித்தது. வீரய்யாபழனிவேலு அ.தி.மு.க.வை சேர்ந்தவர் ஆவார்.

விழுப்புரம்

சென்னையில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரசீதுகளில் இருந்த முகவரியில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி பின்புறம் சாலாமேடு புகாரி நகரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ நதிஅம்பாள் ஏஜென்சியிடம் உபகரணங்கள் பெற்றதாக, ரசீதுகள் இருந்தது.

இதையடுத்து அந்த முகவரியில் உள்ள பிளீச்சிங் பவுடர் ஏஜென்சி அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை சென்றனர்.

கடந்த ஓராண்டாக அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இருப்பினும் கட்டிடத்தின் உரிமையாளர் மூலமாக அலுவலக சாவியை வாங்கிய போலீசார் தங்களது சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனையின்போது அந்த அலுவலகத்தில் இருந்த 2 மடிக்கணினிகள், பிரிண்டர் மெஷின் மற்றும் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

தர்மபுரியிலும் சோதனை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் (வயது 55). இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டுகளில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தார்.

கொரோனா தொற்று காலகட்டத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து ரூ.27 லட்சத்து 85 ஆயிரம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணன் மற்றும் விழுப்புரம், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்த பாப்பாத்தி, வீரய்யா பழனிவேலு, தாகீர் உசேன், வன ரோஜா ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வீட்டில் சோதனை

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தர்மபுரி கருவூல காலனி பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் நேற்று 5 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முக்கிய ஆவணங்கள் சிக்கின

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் வழக்குக்கு தேவையான சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி இருக்கிறார். தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் முன்பு, சிவகங்கை மாவட்ட கலெக்டராக பதவி வகித்துள்ளார்.

இவரது கணவர் சொந்தமாக தொழில் செய்வதாக கூறப்படுகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள்.


Next Story