பேக்கரி உரிமையாளர் வீட்டில் ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளை


பேக்கரி உரிமையாளர் வீட்டில் ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 28 Aug 2023 9:30 PM GMT (Updated: 28 Aug 2023 9:30 PM GMT)

கணபதியில் பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கணபதி

கணபதியில் பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பேக்கரி உரிமையாளர்

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி (வயது 56). இவர் தனது குடும்பத்துடன் கோவை கணபதி-சங்கனூர் சாலையில் உள்ள தெய்வநாயகி நகர் 3-வது வீதியில் வசித்து வருகிறார். ஆரோக்கிய சாமி அந்த பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோர் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்காக வெள்ளக்கிணறு பகுதியில் குடோனும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆரோக்கிய சாமி சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றார். அப்போது அன்றைய தினம் பேக்கரி, டைல்ஸ் வியாபாரத்தில் வசூலான பணத்தையும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.

நகை, பணம் கொள்ளை

ஊருக்கு சென்ற ஆரோக்கியசாமி நேற்று காலை கோவை வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு, மர்ம ஆசாமிகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இந்த புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கணபதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story