என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகைகள் கொள்ளை


என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகைகள் கொள்ளை
x

வடலூரில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

கதவு பூட்டு உடைப்பு

வடலூர் வெங்கட்டங்குப்பம் நாயுடு தெருவை சேர்ந்தவர் முரளி மகன் வெங்கடேஷ் (வயது 29). டிப்ளமோ ஆட்டோ மொபல் என்ஜினீயர். எகிப்தில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் கோவையில் இருக்கும் தன்னுடைய தங்கையை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு தாயுடன் சென்றார்.

பின்னர் மறுநாள் மீண்டும் ஊருக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

33 பவுன் நகைகள் மாயம்

வெளிபுற இரும்பு கேட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கே பீரோவும் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன. உடன் அவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், வளையல், குண்டு செயின், தாலி, தோடு, டாலர், நாணயம் உள்ளிட்ட 33 பவுன் நகைகளையும், வெள்ளி கொலுசையும் பார்த்தார். அவற்றை காணவில்லை.

ரூ.14 லட்சம் மதிப்பு

இதை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இது பற்றி வெங்கடேஷ் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.14 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளைபோன நகைகள் அனைத்தும் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்ததன. இவை அனைத்தையும் சமீபத்தில்தான் வெங்கடேஷ் மீட்டு பீரோவில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story