வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
கோவை
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர்
கோவை சிவாஜி காலனியை சேர்ந்தவர் தீபக் (வயது 22). எம்.பி.ஏ பட்டதாரி. கடந்த மாதம் இவரது வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு லிங்குடன் கூடிய ஒரு மெசேஜ் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து தீபக் அந்த லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.
அதில் தீபக் தனது விவரங்களை பதிவிட்டார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் பணிகளை செய்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும், கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய தீபக் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு முதலில் சிறிய தொகையை அனுப்பினார்.
ரூ.14 லட்சம் மோசடி
அப்போது அவருக்கு குறிப்பிட்ட தொகை லாபம் கிடைத்தது. பின்னர் தீபக்கை தொடர்பு கொண்ட அந்த நபர் அதிகளவில் முதலீடு செய்தால் இதை விட அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தீபக் சிறிது, சிறிதாக ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 500 முதலீடு செய்தார்.
ஆனால் அதன்பின்னர் அவருக்கு எந்த விதமான கமிஷனும், லாப தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறி தீபக்கிடம் ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 500-ஐ மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore