வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் நூதன மோசடி

திருமண தகவல் மையம் மூலம் பழகி கோவை வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் நூதன முறையில் மோசடி செய்த வழக்கில் நெதர்லாந்தில் இருந்து பேசியதாக கூறிய இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமண தகவல் மையம் மூலம் பழகி கோவை வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் நூதன முறையில் மோசடி செய்த வழக்கில் நெதர்லாந்தில் இருந்து பேசியதாக கூறிய இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஏ.சி. விற்பனையாளர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நவீன் (வயது 27). இவர் ஏ.சி. விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் தேடி வந்தனர். அத்துடன் திருமண தகவல் மையத்திலும் பதிவும் செய்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் ஒரு இளம்பெண் பேசினார்.
அதில் தனது பெயர் சூசன் (23) கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்றும், தனது தந்தை இறந்துவிட்டார். இதனால் நானும் எனது தம்பியும் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறோம். நான் இங்கு டாக்டராக உள்ளேன். நீங்கள் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்ததை பார்த்தேன். உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டு உள்ளார்.
நெதர்லாந்து பெண் டாக்டர்
இதையடுத்து 2 பேரும் வாட்ஸ்-அப் மூலம் புகைப்படங்களை அனுப்பி வைத்து உள்ளனர். இதில் 2 பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்ததாக தெரிகிறது. இதனால் நவீனும் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து 2 பேரும் தினமும் வாட்ஸ்-அப் மூலம் பேசி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நவீனிடம் பேசிய சூசன், நானும் எனது தம்பியும் நெதர்லாந்து நாட்டில் இருந்து ஊருக்கு வருகிறோம். ஊருக்கு வந்ததும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதுடன், நெதர்லாந்தில் இருந்து டெல்லி வருவதற்கான விமான டிக்கெட்டையும் காண்பித்தார். எனவே அவரின் வருகைக்காக நவீன் காத்திருந்தார்.
ரூ.16¼ லட்சம் செலுத்தினார்
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் டெல்லி விமான நிலைய சுங்க அதிகாரி மணிசர்மா என்றும், நெதர்லாந்து நாட்டில் இருந்து சூசன் என்பவர் இங்கு வந்து உள்ளார். அவர் ரூ.1 லட்சம் யூரோ பணத்தை கொண்டு வந்து உள்ளார். அதன் மதிப்பு ரூ.81 லட்சம் ஆகும்.
அதற்கான வரியை சூசன் செலுத்தவில்லை என்பதால் அவரை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பிடித்து வைத்து உள்ளனர். எனவே அதற்கான வரி ரூ.16 லட்சத்து 24 ஆயிரத்து 400-ஐ செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். அத்துடன் அவர் வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்து உள்ளார். அதை நம்பிய நவீன், அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.16 லட்சத்து 24 ஆயிரத்து 400-ஐ செலுத்தினார்.
செல்போன் சுவிட்ச்-ஆப்
அதன் பின்னர் டெல்லியில் இருந்து பேசிய அதிகாரியின் எண்ணை தொடர்பு கொண்டு தான் வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டதாக தகவல் தெரிவித்தார். உடனே அவர் தான் சூசனை அனுப்பி வைப்பதாக கூறினார். இதையடுத்து சில நிமிடங்கள் கழித்து நவீன், சூசனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த நவீன், தன்னிடம் சுங்க அதிகாரி என்று பேசியவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அதுவும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இளம்பெண் மீது வழக்கு
இதையடுத்து நவீன், கிருஷ்ணகிரிக்கு சென்று விசாரித்தபோது, நெதர்லாந்து நாட்டில் பேசிய சூசன் கூறிய தகவல் அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சூசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று யாரும் பேசி பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






