தொழிலாளி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை-பணம் கொள்ளை
திருக்கோவிலூர் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்து ரூ.16¼ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்
தொழிலாளி
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்புசாமிபெருமாள் மகன் மாணிக்கவாசகம்(வயது 45). விவசாய தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை தனது மனைவி கங்காவுடன் அதே ஊரில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார்.
அவரது மகன் கிருஷ்ணா, மகள் பவானி ஆகியோர் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். மாணிக்கவாசகத்தின் தாயார் காசி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை திட்டப்பணிக்கு சென்று விட்டார்.
நகை-பணம் கொள்ளை
இந்த நிலையில் கரும்பு வெட்டும் வேலை முடிந்த பின்னர் மாணிக்கவாசகம், கங்கா இருவரும் மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அறையில் சென்று பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.16¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
மேலும் அருகில் இரும்பு பெட்டியில் இருந்த சாவியையும் காணாமல் அதிர்ச்சி அடைந்த மாணிக்கவாசகம் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் அங்கு ஓடி வந்து நடந்த விபரத்தை கேட்டறிந்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதபற்றிய தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் மணலூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் புகுந்து ரூ.16¼ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.