மும்பை தொழில் அதிபரிடம் ரூ.18½ லட்சம் மோசடி
துணி நூல்கள் அனுப்பி வைப்பதாக கூறி மும்பை தொழில் அதிபரிடம் ரூ.18½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உக்கடம்
துணி நூல்கள் அனுப்பி வைப்பதாக கூறி மும்பை தொழில் அதிபரிடம் ரூ.18½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழில் அதிபர்
மும்பையை சேர்ந்தவர் பாரீக் (வயது 52), தொழில் அதிபர். இவர் பல இடங்களில் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். தொழில் ரீதியாக இவருக்கு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நூல் வியாபாரிகளான ரமேஷ் என்கிற புருஷோத்தமன் (55), காஜா உசேன் (57) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் பாரீக் அடிக்கடி 2 பேரிடமும் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 1999-ம் ஆண்டு புருஷோத்தமன், காஜா உசேன் ஆகியோரை தொடர்பு கொண்ட பாரீக், தனக்கு நூல்கள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு 2 பேரும் அதற்கான தொகையை செலுத்தும்படி கூறினர்.
துணி நூல்கள் அனுப்பவில்லை
அதன்படி அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு பாரீக் ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து 972-ஐ செலுத்தினார். இதுகுறித்த தகவலையும் அவர்களுக்கு தெரிவித்தார். ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் 2 பேரும் பாரீக்குக்கு நூல்களை அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து பாரீக், 2 பேரையும் தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கு அவர்கள் விரைவில் நூல்களை அனுப்பி வைப்பதாக கூறினர்.
இருப்பினும், நூல்களை அனுப்பி வைக்கவில்லை. இதனால் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்ட பாரீக், எனக்கு நூல்கள் வேண்டாம், நான் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து புருஷோத்தமன், காஜா உசேன் ஆகியோர் சேர்ந்து ஒரு காசோலையை பாரீக்குக்கு அனுப்பி வைத்தனர். அதை அவர் வங்கியில் பணம் எடுப்பதற்காக போட்டபோது, 2 பேரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.
2 பேர் மீது வழக்கு
இதற்கிடையே பாரீக் தொடர்ந்து பணம் கேட்ட போது, கோவை வந்து பணத்தை வாங்கிச்செல்லும்படி கூறினர். தொடர்ந்து பாரீக் கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதிக்கு வந்து காத்திருந்தார். ஆனால், அவர்கள் 2 பேரும் அங்கு செல்லவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாரீக், இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் புருஷோத்தமன், காஜா உசேன் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த மோசடி கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்று உள்ளது. ஆனால், இப்போதுதான் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.