அண்ணாசாலையில் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டருக்கு சொந்தமான ரூ.20 கோடி கட்டிடம் அபகரிப்பு - 2 பேர் கைது


அண்ணாசாலையில் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டருக்கு சொந்தமான ரூ.20 கோடி கட்டிடம் அபகரிப்பு - 2 பேர் கைது
x

இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டருக்கு சொந்தமான, அண்ணாசாலையில் உள்ள ரூ.20 கோடி மதிப்புள்ள 3 மாடி கட்டிடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை பகுதியில் 3 மாடியில் இயங்கும் பிரபல விடுதி உள்ளது. இதன் மதிப்பு ரூ.20 கோடி. இந்த கட்டிடம் சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த மனு அலெக்சாண்டர் (வயது 50) என்ற டாக்டருக்கு சொந்தமானது. அலெக்சாண்டர் தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமான மேற்படி விடுதி கட்டிடத்தை சிலர் ஆள்மாறாட்டம் மூலம், போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டதாக தெரிகிறது.

இதை தெரிந்து கொண்ட, டாக்டர் அலெக்சாண்டர் சென்னை வந்து, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். போலி ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகாரில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் ஆரோக்கியம் ஆகியோர் மேற்பார்வையில், நில மோசடி தடுப்பு புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் ராஜ்பால், இன்ஸ்பெக்டர் பொன்சித்ரா ஆகியோர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேற்படி விடுதி கட்டிடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (53), சூளைமேட்டைச் சேர்ந்த பீர் முகமது (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story