கஞ்சா வியாபாரி-உறவினர்களின் ரூ.22½ லட்சம் சொத்துக்கள் முடக்கம்


கஞ்சா வியாபாரி-உறவினர்களின் ரூ.22½ லட்சம் சொத்துக்கள் முடக்கம்
x

தேனி மாவட்டத்தில் மேலும் கஞ்சா வியாபாரி மற்றும் உறவினர்களின் ரூ.22½ லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

தேனி

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா பதுக்கல் மற்றும் கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்கில் கைதான 5 பேரின் வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவை சேர்ந்த முருகன் என்ற கீரிப்பட்டி முருகன் (வயது 52) என்பவர் 220 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு மயிலாடும்பாறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கீரிப்பட்டி முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

சொத்துக்கள் முடக்கம்

இதையடுத்து இந்த கஞ்சா வியாபாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா ஆகியோர் அறிவுறுத்தினர். அதன்பேரில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில், ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர், கீரிப்பட்டி முருகன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் விவரங்களை சேகரித்தனர். இந்த விசாரணையில் முருகனின் தங்கை இந்திராணி பெயரில் குமணன்தொழுவில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலம், மைத்துனர் நாகராஜ் பெயரில் உள்ள ரூ.12 லட்சம் மதிப்புள்ள வீடு, முருகனின் பெயரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் என சுமார் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சொத்து விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த சொத்துக்கள் அனைத்தும் இன்று முடக்கப்பட்டன.

17 பேர் மீது குண்டர் சட்டம்

கஞ்சா வழக்கில் சொத்துக்களை முடக்குவது இந்த ஆண்டில் இது 2-வது முறையாகும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்குகளில் 40 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 66 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 335 கிலோ கஞ்சா மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 123 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை அனைத்தும் முடக்கம் செய்து, அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், கஞ்சா வியாபாரியுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள், விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story