பெட்ரோல் பங்கில் நூதன முறையில் ரூ.23¼ லட்சம் மோசடி


பெட்ரோல் பங்கில் நூதன முறையில் ரூ.23¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

தக்கலை அருேக பெட்ரோல் பங்கில் நூதன முறையில் ரூ.23¼ லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் லாசர் (வயது 69). இவர் தக்கலை அருகில் உள்ள கொல்லகுடிமுக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு நெய்யூரை ேசர்ந்த நிஜில் பிரேம்சன் (வயது 33) என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த பங்கில் பெட்ரோல் போட வரும் சில வாடிக்கையாளர்கள் கூகுள் பே மூலம் பணத்தை செலுத்துவது வழக்கம். அந்த பணம் பெட்ரோல் பங்கின் வங்கி கணக்கில் சென்றுவிடும். இவ்வாறு செலுத்தப்படும் பணத்திற்கான ரசீது மற்றும் வரவு கணக்கை நிஜில் பிரேம்சன் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் லாசர் வங்கி கணக்கை ஆய்வு செய்தார். அப்போது கடந்த ஒரு ஆண்டாக வாடிக்கையாளர்கள் கூகுள் பே மூலம் செலுத்திய லட்சக்கணக்கான பணம் வங்கி கணக்கில் வரவு ஆகாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் ஊழியர் நிஜில் பிரேம்சனிடம் கேட்டார். அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறினார். அவரது பதிலில் சந்தேகம் அடைந்த உரிமையாளர் வழக்கமாக பெட்ரோல் போடும் சில வாடிக்கையாளர்களிடம் ரகசியமாக விசாரித்தார்.

அப்போது நிஜில் பிரேம்சன் நூதன முறையில் பணம் மோசடி செய்தது அம்பலமானது. அதாவது அவர் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் போட்டதற்கான பணத்தை பெற அங்கு இருக்கும் கியூ.ஆர்.குறியீட்டில் ஸ்கேன் செய்ய கூறாமல் தனது செல்போன் நம்பரை கொடுத்து போன்பே செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் பணம் அவரது வங்கி கணக்கில் வரவாகி வந்தது. இவ்வாறு செலுத்தும் தொகைக்கு அவர் போலியாக ரசீது போட்டு கணக்கு காட்டி வந்தார்.

இவ்வாறு கடந்த ஒரு ஆண்டாக பெட்ரோல் பங்கின் வங்கி கணக்குக்கு போகவேண்டிய ரூ.23 லட்சத்து 39 ஆயிரத்து 727 பணம் நிஜில் பிரேம்சனின் வங்கி கணக்கில் சென்றது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி குறித்து அறிந்து கொண்ட உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து நிஜில் பிேரம்சனிடம் பணத்தை கேட்ட போது அவர் பணத்தை கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் நிஜில் பிரேம்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் பங்கில் இருந்து நூதன முறையில் ரூ.23¼ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story