துணிக்கடையில் ரூ.24 லட்சம் நூதன மோசடி: ஊழியர்கள் 2 பேர் கைது
மாதவரத்தில் துணிக்கடையில் நூதன முறையில் ரூ.24 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னைைய அடுத்த மாதவரம் தபால் பெட்டியை சேர்ந்தவர் விமல் குமார். இவர், தனது நண்பர் பிரவீன்குமார் என்பவருடன் இணைந்து மாதவரம் நெடுஞ்சாலை கே.கே.ஆர். நகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் விமல்குமார் கடையின் கணக்குகளை சரிபார்த்தார். அதில் கடையில் துணிகள் விற்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான பணம் ரூ.24 லட்சம் குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடை ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் மாதவரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அதில் அந்த கடையில் வேலை செய்த பெரம்பூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த அருண்குமார்(வயது 28), மாத்தூர் சின்னசாமி தெருவைச் சேர்ந்த பரத்(25), மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியைச் சேர்ந்த ரிட்டன் பாபு(25) மற்றும் தாமஸ்(22), புவனேஸ்வர்(25) ஆகிய 5 பேரும் ஆடைகளை விற்பனை செய்துவிட்டு அதற்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் 'கூகுள்பே' மூலம் வாங்கும்போது கடையின் வங்கி கணக்கில் வாங்காமல் அவரவர் வங்கி கணக்கில் வாங்கினர்.
இவ்வாறு சிறிது சிறிதாக 5 பேரும் ரூ.24 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து ேபாலீசார் அருண்குமார், பரத் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரிட்டன் பாபு, தாமஸ், புவனேஸ்வர் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.