பெட்ரோல் நிலையம் வைத்து தருவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.24 லட்சம் மோசடி;மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
பெட்ரோல் நிலையம் வைத்து தருவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.24 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெட்ரோல் நிலையம்
விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 21). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் நிலையம் வைப்பதற்காக கூகுளை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஆன்லைன் மூலம் வரப்பெற்ற இணையதள முகவரியில் பதிவு செய்தார்.
பின்னர் பிரவீன்குமாரை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், பெட்ரோல் நிலையம் தொடங்குவதற்கு பிடிஎப் ஆவண விவரங்கள் முழுவதையும் அனுப்பி வைத்து பிரவீன்குமாரின் விவரங்களை பெற்ற பிறகு பதிவு கட்டணமாக ரூ.10,500, டீலர்ஷிப் சான்றிதழுக்காக ரூ.1 லட்சத்து 65 ஆயிரம், உரிம கட்டணம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரம், பாதுகாப்பு டெபாசிட்டாக ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 500, அனுமதிச்சான்றிதழுக்காக ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 500 ஆகியவற்றுக்காக பணம் அனுப்பி வைக்குமாறு அந்த நபர் கூறியுள்ளார்.
ரூ.24 லட்சம் மோசடி
இதை உண்மையென நம்பிய பிரவீன்குமார், தான் கணக்கு வைத்துள்ள 2 வங்கி கணக்குகளில் இருந்தும், தன்னுடைய உறவினர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்தும் கூகுள்பே மூலமாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு 16.9.2023 முதல் 4.10.2023 வரை வெவ்வேறு தேதிகளில் 17 தவணைகளாக மொத்தம் ரூ.23 லட்சத்து 91 ஆயிரத்து 500-ஐ அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், பிரவீன்குமாருக்கு பெட்ரோல் நிலையம் வைத்துக் கொடுப்பதற்கான எந்தவொரு பணியில் ஈடுபடாமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்ததோடு மேலும் ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டு வருகிறார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
பணத்தை பறிகொடுத்த பிரவீன்குமார், இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.