ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு


ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை கோர்ட்டு வளாகத்தில் ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்

கோவை கோர்ட்டு வளாகத்தில் ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டுக்கு வந்தார்

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் வேறுநபருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கவிதா, கணவரை பிரிந்து அந்த நபருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இதை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை தன்னுடன் வரும் படி அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை. பலமுறை அழைத்த போதும் அவர் வராததால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக கவிதா கடந்த மாதம் 23-ந் தேதி கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார்.

ஆசிட் வீச்சு

அப்போது அங்கு வந்த சிவக்குமார், கவிதாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்த தால், ஆத்திரம் அடைந்த அவர், தனது மனைவி மீது ஆசிட் வீசினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில் பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் நீதிபதி கே.எஸ்.எஸ்.சிவா விசாரணை நடத்தி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

ரூ.3 லட்சம் இழப்பீடு

இதையடுத்து பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின்படி இடைக்கால இழப்பீடு நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்க மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் உத்தரவிட்டார்.

அது போன்று பொள்ளாச்சி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் உயிரிழந்தார். அந்த பெண்ணின் மகன் செந்திலுக்கு இழப்பீடு நிவாரணமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கவும் நீதிபதி கே.ராஜசேகர் உத்தரவிட்டார்.


Next Story