தூத்துக்குடியில் ரூ.3 லட்சம் களைக்கொல்லி பறிமுதல்


தூத்துக்குடியில் ரூ.3 லட்சம்   களைக்கொல்லி பறிமுதல்
x

தூத்துக்குடியில், இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் களைக்கொல்லி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான களைக்கொல்லியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் ரோந்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி மஞ்சள், வெங்காய விதை, கடல் அட்டை, களைக்கொல்லி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடற்கரையோர ரோந்து பணியையும் அதிகரித்து உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தருவைக்குளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரர் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள காட்டுப்பகுதியில் 12 வெள்ளை சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக அந்த மூட்டைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனர்.

களைக்கொல்லி பறிமுதல்

அந்த மூட்டைகளில் விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லி மருந்துகள் இருந்தன. மொத்தம் 375 லிட்டர் களைக்கொல்லி மருந்து பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக களைக்கொல்லி மருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்த களைக்கொல்லியை போலீசார் தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story