விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை
விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைைய கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் சலாமத் நகரை சேர்நதவர் கணேசன்(வயது 54). இவர் விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கணேசன் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கணேசனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
நகை கொள்ளை
இதையடுத்து அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, துணி மணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், வீட்டில் இருந்த விலையுயர்ந்த எல்.இ.டி டி.வி. உள்ளிட்ட பொருட்களை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம்பிடித்தப்படி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.