ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; 2 பேர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:45 PM GMT)

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ரெயில்வே வேலை

தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (வயது 34). இவருக்கும், மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் மாரியப்பன் (65) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முத்துகிருஷ்ணன், அவரது சகோதரரிடம், மாரியப்பன் மற்றும் சாயல்குடி கீழமுடிந்தலை சேர்ந்த சந்திரன் மகன் ராஜேசுவரன் (28) ஆகிய 2 பேரும் சேர்ந்து ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதற்காக 1.2.22 முதல் 31.12.22 வரை பல தவணையாக ரூ.30 லட்சம் பணத்தை பெற்று உள்ளனர்.

அதன்பிறகு முத்துகிருஷ்ணன், அவரது சகோதரர் ஆகிய 2 பேரையும் மேற்கு வங்காளம் ஹவுராவுக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு போலி சான்றிதழ் கொடுத்து ரெயில்வே பணிக்கு பயிற்சி என்று கூறி கொல்கத்தா, டெல்லி ரெயில் நிலையங்களுக்கு அலைக்கழித்து உள்ளனர். அதன்பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதனை அறிந்த முத்துகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தார்.

கைது

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து துணை சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டதாக மாரியப்பன், ராஜேசுவரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் இதுபோன்று மேலும் பலரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 28 லட்சம் வரை பணம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story