சென்னைக்கு செல்ல லாரிக்கு ரூ.300 கூடுதல் செலவாகிறது: சேலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-லாரி உரிமையாளர்கள் வேதனை


சென்னைக்கு செல்ல லாரிக்கு ரூ.300 கூடுதல் செலவாகிறது: சேலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-லாரி உரிமையாளர்கள் வேதனை
x

சேலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வால் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் லாரிக்கு கூடுதலாக ரூ.300 வரை செலவாகிறது. இந்த கட்டணத்தால் லாரி உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சேலம்

சுங்க கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 450-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவாடிகள் உள்ளன. தமிழகத்தில் 63 இடங்களில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் மாதம் 1-ந் தேதிமீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, கருப்பூர், வைகுந்தம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கருப்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் இலகு ரக வாகனங்கள் ஒருமுறை சென்று வருவதற்கு ரூ.165-ல் இருந்து ரூ.170 ஆகவும் ஒரே நாளில் பல முறை சென்று வருவதற்கு ரூ.250-ல் இருந்து ரூ.255-ஆகவும், மாத கட்டணம் ரூ.5 ஆயிரத்து 20 இருந்து ரூ.5 ஆயிரத்து 90 ஆகவும் உயர்ந்துள்ளது.

கூடுதல் செலவு

இதேபோல் கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வருவதற்கு ரூ.335-ல் இருந்து ரூ.340-ஆகவும், பலமுறை சென்று வருவதற்கு ரூ.505-ல் இருந்து ரூ.510 ஆகவும், மாத கட்டணம் ரூ.10 ஆயிரத்து 40-ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 180 ஆகவும், 2 அச்சு மிக கனரக வாகனம் ஒருமுறை சென்று வருவதற்கு பழைய கட்டணம் ரூ.540-ல் இருந்து ரூ.545 ஆகவும், பலமுறை சென்று வருவதற்கு ரூ.810-ல் இருந்து ரூ.820-ஆகவும், மாத கட்டணம் ரூ.16 ஆயிரத்து 135-ல் இருந்து 16 ஆயிரத்து 360 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வால் தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தமிழ்நாடு தலைவர் தனராஜ் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 6 லட்சம் லாரிகள் இயங்கின. அதன்பிறகு கொரோனா பாதிப்பு, டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் 1½ லட்சம் லாரிகள் தற்போது இயங்கவில்லை.

திரும்ப பெற வேண்டும்

தற்போது 4½ லட்சம் லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் வருமானம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் சேலத்தில் இருந்து சென்னைக்கு ஒரு லாரி சென்று வருவதற்கு ரூ.300 வரை கூடுதலாக செலவாகும். மத்திய அரசு 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று அறிவித்தது. ஆனால் இதுவரை அகற்றப்பட வில்லை. மேலும் தமிழகத்தில் 33 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி உள்ளன. அதை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சுங்க கட்டணம் உயர்வால் லாரி வாடகையை உயர்த்த முடியாது. எனவே உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் டீசலுக்கு ரூ.10 வரை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story