அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி
கோவையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-
அரசு வேலை தருவதாக மோசடி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 32). இவருடைய தாயார் மணி (வயது 53), மனைவி சோபனா (27).
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் தங்களுக்கு அரசு உயர் பதவியில் தெரிந்தவர்கள் உள்ளனர். எனவே கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கித்தருவதாக பலரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய பலரும் வேலைக்காக லட்சக்கணக்கில் மோகன்குமார் உள்பட 3 பேரிடம் பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேலைக்கான போலி ஆணைகளையும் தயார் செய்து, பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்துள்ளனர்.
வேலைக்கான ஆணையை கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தபோதுதான் அது போலியானது என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
டிராவல்ஸ் நிறுவனம்
இதையடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை மோகன்குமார், அவருடைய மனைவி சோபனா, தாயார் மணி ஆகியோரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திரும்பி கொடுக்கவில்லை.
ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பணத்தின் மூலம் வேன் மற்றும் கார்களை வாங்கி மோகன்குமார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இந்த மோசடி குறித்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில், அரசு வேலைக்காக வாங்கி தருவதாக கூறியதால் நான் ரூ.36 லட்சத்து 7 ஆயிரத்தை பலரிடமும் வசூலித்து, மோகன்குமாரிடம் கொடுத்ததாகவும் ஆனால் ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் கூறி இருந்தார்.
தாய்-மகன் கைது
இந்த மோசடி குறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த மோகன்குமார், அவருடைய தாயார் மணி ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சோபனாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இதுபோன்று மேலும் பலரிடம் இதுபோன்ற மோசடி நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான மோகன்குமார், மணி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.