வீட்டு பூட்டை உடைத்து ரூ.4¼ லட்சம் நகை, பணம் கொள்ளை
வீட்டு பூட்டை உடைத்து ரூ.4¼ லட்சம் நகை, பணம் கொள்ளை
பீளமேடு
கோவை பீளமேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4¼ லட்சம் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சுய தொழில்
கோவை தண்ணீர் பந்தல் பகுதி ஓம் முருகா தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது46). சுய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் செங்கதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு சில நாட்கள் அவர் தங்கியிருந்தார்.
இதன் பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து நேற்றுமுன்தினம் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு, அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகள் சிதறி கிடந்தன.
திருட்டு
மேலும் வீட்டு அலமாரியில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பது கண்டு குணசேகரன் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் 2 நாட்களாக ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். திருடு போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4 ¼ லட்சம் ஆகும்.
இது குறித்து குணசேகரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.