மீன் வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் திருட்டு
விழுப்புரம் அருகே மீன் வியாபாரி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
மீன் வியாபாரி
விழுப்புரம் அருகே உள்ள குமளம் புதுநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து(வயது 48). இவர் கோவாவில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி, மகன்கள் கலைச்செல்வன், விமல்ராஜ் ஆகியோர் மட்டும் குமளத்தில் வசித்து வருகின்றனர். வீரமுத்து அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வீரமுத்துவை பார்ப்பதற்காக அவரது மனைவியும், மகன்களும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கோவாவுக்கு சென்றனர். வீரமுத்துவின் அக்காள் இந்திராணி தினமும் வீட்டிற்கு சென்று சுத்தம் செய்துவிட்டு மின்விளக்கு போட்டு சென்று வந்துள்ளார்.
நகை திருட்டு
இந்நிலையில் நேற்று காலை இந்திராணி, தனது தம்பி வீரமுத்து வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., சமையல் கியாஸ் சிலிண்டர், காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து அவர், வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், மேற்கண்ட நகை, பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.