வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
சங்கராபுரம் அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி செல்வி(வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் ஊருக்கு வந்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் டார்ச் லைட், துணிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.பி.பாளையத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவரின் வீ்ட்டிலும் மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.