தேனாற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் புதிய தடுப்பணை


தேனாற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் புதிய தடுப்பணை
x

தேனாற்றின் குறுக்கே ரூ.5½ கோடியில் புதிய தடுப்பணை கட்ட அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

சிவகங்கை

காரைக்குடி,

தேனாற்றின் குறுக்கே ரூ.5½ கோடியில் புதிய தடுப்பணை கட்ட அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

புதிய தடுப்பணை

காரைக்குடி அருகே உ.சிறுவயல் கிராம பகுதியில் தேனாற்றின் குறுக்கே உய்யக்கொண்டான் கண்மாய்க்கு பாசன வசதி அளித்திடும் வகையில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். அதன்பின் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் அதிக விளைநிலங்களையும், ஏரி, குளம், கண்மாய் நிறைந்த மாவட்டமாக உள்ளது. மேலும் பாலாறு, தேனாறு, வைகை ஆறு, மணிமுத்தாறு ஆகியவை இந்த மாவட்டத்தை கடந்து செல்கின்றன.

இருப்பினும் கடைமடை பகுதியாக இருப்பதால் போதுமான அளவு நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லாமல் வறட்சி சூழ்ந்த மாவட்டமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 7 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. 4 தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.5½ கோடி

இந்த தடுப்பணையானது ரூ.5 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதன் மூலம் 380 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளன. 7 கண்மாய்களுக்கு இதிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

மேலும் இப்பகுதிகளில் உள்ள அரண்மனைப்பட்டி, பலவான்குடி, உ.சிறுவயல், குன்றக்குடி, பாதரக்குடி போன்ற கிராமங்களும் பாசன வசதி பெற உள்ளனர். மேலும் இத்திட்டத்தில் தடுப்பணை, மணல் போக்கி கட்டுதல், புதிய தலை மதகுகள் கட்டுதல், வெள்ளக்கரைகளை உயர்த்தி புனரமைத்தல், கால்வாய் மராமத்து பணி செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன், கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைவேலு, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் கே.ஆர்.ஆனந்த், தி.மு.க. முன்னாள் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story