தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ரூ.5 கோடி பரிசு -டாக்டர் ராமதாஸ் பேச்சு
தமிழை எங்கேயாவது பார்த்தேன் என்று சொல்பவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை,
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனரும், பா.ம.க. நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் நடத்தும், 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பிரசார பயணத்தின் தொடக்க விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த பிரசார பயணம் சென்னையில் இருந்து மதுரை வரை 8 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது.
தொடக்க விழாவுக்கு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி வரவேற்று பேசினார். விழாவின் தொடக்கமாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தமிழன்னை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பிரசார வாகனத்தில் அமைக்கப்பட்டு இருந்த தமிழன்னை சிலையை திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் எழுதிய 'எங்கே தமிழ்?' என்ற புத்தகத்தை வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் வெளியிட டெல்லி தலைநகர் தமிழ் சங்க செயலாளர் முகுந்தன் பெற்றுக்கொண்டார். விழாவில், எழுகதிர் ஆசிரியர் அரு.கோபாலன், அனைத்திந்திய தமிழ எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ.பெரியண்ணன், தலைநகர் தமிழ் சங்க சென்னை தலைவர் கணபதி, டெல்லி முத்தமிழ் பேரவைத் தலைவர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
ரூ.5 கோடி பரிசு
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழைத் தேடி நான் போகிறேன் என்பதைவிட, நாம் அனைவரும் செல்கிறோம் என்றுதான் கூற வேண்டும். தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று எண்ணுகின்ற அனைவரின் நல்லுள்ளங்களும் என்னோடு மதுரை வரை வருகிறது. உலக தாய்மொழி தினமான இன்று (நேற்று) தமிழ் எங்கே இருக்கிறது? அந்த தோட்டத்தில் பார்த்தேன், இந்த தோட்டத்தில் பார்த்தேன், அந்த கல்லூரியில் பார்த்தேன், தலைமை நிலையத்தில் பார்த்தேன், நீதிமன்றத்தில் பார்த்தேன் என்று யாராவது சொன்னார்கள் என்றால், அவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு அளிக்கிறேன். என்னிடம் ரூ.5 ஆயிரம் கூட இல்லை. ஆனால், என் தலையை அடகு வைத்தாவது கொடுக்கிறேன். எனக்குத் தெரியும், தமிழ் இருக்கிறது என்று யாராவது சொல்வார்களா? சொல்ல முடியாது. சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை. அப்படி சொல்கிறார்கள் என்றால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.
பிறமொழி பேசுபவர்களுக்கு எதிரானதல்ல
பாரதியாரின் நண்பர் நீலகண்ட சாஸ்த்திரி, 'தமிழ் இனி மெல்ல சாகும்' என்றார். அது இப்போது உண்மையாகி போனது. அது உண்மையாகலாமா? தமிழை சாக விடலாமா? நீங்களும் நானும் பேசுவதில் எத்தனை பிறமொழி கலப்பு உள்ளது தெரியுமா?. 'ஹலோ, தேங்க்யூ, மம்மி, டாடி' என்றுதான் பேசுகிறோம். கலப்பு இல்லாமல் பேச தமிழ் ஓசை இல்லை. இவ்வாறு பேசுவதில், நான் யோசித்து யோசித்து பார்த்து பிறமொழி கலப்பு இருந்தால் எனக்கு நானே ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கொள்வேன். அதே போன்று நீங்களும் செய்ய வேண்டும். பிரான்ஸ் நாட்டில் 'தேங்க்யூ' என்ற ஒரே ஒரு ஆங்கிலச்சொல் நுழைந்ததற்கு நாடே கொந்தளித்துவிட்டது.
'தமிழைத்தேடி' பிரசார பயணம் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி பேசுபவர்களுக்கு எதிரானது அல்ல. இந்த பயணத்தை பற்றி தமிழ் கூறும் நல்லுலகம், தமிழ் விரும்பிகளால் இப்போது பேசப்படுகிறது. இது சிறிய அளவு வெற்றிதான். தமிழ் சங்கம் வளர்த்த மதுரையை சென்றடையும்போது இந்த பிரசார பயணம் வெகுவாக பேசப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தலைநகர் தமிழ் சங்க முன்னாள் தலைவர் த.சுந்தரராஜன், பிரபல பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் மற்றும் மு.ஜெயராமன், ஈகை தயாளன், கே.என்.சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறைமலைநகரில் பொதுக்கூட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை நோக்கி பரப்புரை பயணத்தை தொடங்கிய டாக்டர் ராமதாஸ், செல்லும் வழியில் மறைமலைநகரில் நேற்று இரவு பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் பேசுமபோது, " நான் தமிழைத்தேடி மதுரை நோக்கி பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது. தமிழ் பேசும்போது பிற மொழி கலந்து பேசாதீர்கள். உங்கள் வீட்டில் இருந்து தமிழ் பேசும் பயணம் தொடங்கட்டும்" என்றார்.