2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை


2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


கோவையில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.5½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்

கோவை கணபதியை அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 70), ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டு இருந்தது.உடனே அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்புரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மில் தொழிலாளி

அதுபோன்று கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெயபால் (65), மில் தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு காரமடை சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்றபோது பீரோ திறக்கப்பட்டு இருந்தது.அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீஸ் வலைவீச்சு

கோவையில் 2 வீடுகளில் ரூ.5 ½ லட்சத்துக்கு மேற்பட்ட நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அந்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story