தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
அன்னூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அன்னூர்
அன்னூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 38). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மோகன்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளார்.
பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன.
ரூ.5 லட்சம் நகை திருட்டு
பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திருட்டு குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து சோதனை செய்ததில் சில ரேகைகளும் சிக்கின. மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது மர்ம ஆசாமிகள் திருடிவிட்டு சென்றது பதிவாகி இருக்கிறது.
வலைவீச்சு
எனவே அந்த மர்ம ஆசாமிகள் யார்? இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருவதுடன், அந்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அன்னூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.