தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி
தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி
கோவை
நிலம் விற்பனை செய்வதாக கூறி, போலி ஆவணங்கள் தயாரித்து ரியல் எஸ்டேட் தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.50 லட்சம் மோசடி
கோவை தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த சிவகுமார். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு நணபர்கள் மூலம், சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த பழனிவேல், நியூசித்தாபுதூரை சேர்ந்த என்ஜினீயர் பாரதி என்ற திருஞான சம்பந்த பாரதி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் தங்களுக்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் 3.04 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் ரூ.40 கோடிக்கு அந்த இடத்தை விற்கப்போவதாகவும், அந்த இடத்தை வாங்கிகொள்கிறீர்களா? என்று சிவகுமாரிடம் கேட்டுள்ளனர்.
அந்த இடத்தை பார்த்த அவர், முன்பணமாக ரூ.50 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் நிலத்தின் ஆவணத்தை பரிசோதித்து பார்த்தபோதுதான் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும், மேலும் நில ஆவணம், உயில், நீதிமன்ற உத்தரவு போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து விற்க முயற்சி செய்ததும் சிவக்குமாருக்கு தெரியவந்தது.
என்ஜினீயர் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முன்பணமாக கொடுத்த ரூ.50 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பழனிவேல், பாரதி ஆகியோர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து சிவகுமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் மற்றும் பாரதி என்ற திருஞான சம்பந்த பாரதி மீது அரசு முத்திரையை போலியாக தயாரிப்பது, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தது, மோசடி போன்ற 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பழனிவேல், பாரதி ஆகியோர் மீது கோவை மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் இருப்பதும், தொடர்ச்சியாக இவர்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து என்ஜினீயர் பாரதியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனிவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.