கடலூரில் ரூ.60 கோடி வரி பாக்கி: "வரியை வசூலித்து வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்துங்கள்" அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவு


கடலூரில் ரூ.60 கோடி வரி பாக்கி: வரியை வசூலித்து வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவு
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:45 PM GMT)

கடலூரில் ரூ.60 கோடி வரி பாக்கி இருப்பதாகவும், அதனை வசூலித்து வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, என்ஜினீயர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் என்னென்ன வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளது?, முடிக்கப்பட வேண்டிய பணிகள் எவை என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாநகராட்சியில் சாலை சீரமைப்பு, வடிகால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, எவ்வளவு நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படுகிறது என்பதையும் கேட்டறிந்தார்.

சாலைகளை மேம்படுத்த...

பின்னர் கலெக்டர் கூறுகையில், சென்னையில் இருக்கும் சாலைகள் போன்று, கடலூர் மாநகராட்சியிலும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க வேண்டும். சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் போஸ்டர் மற்றும் பேனர்கள் இருந்தால், அதனை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

வளர்ச்சி திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செய்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு அந்தந்த பணிகளுக்கான தொகையை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை உடனுக்குடன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ரூ.60 கோடி வரி பாக்கி

மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர் வைப்பதற்கு அனுமதி கிடையாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மட்டும் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். மாநகராட்சியில் வரி வசூல் செய்வது மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களுக்கு சுற்றறிக்கை கொடுத்து, பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சிக்கு வரிபாக்கி ரூ.60 கோடி நிலுவையில் உள்ளதை விரைந்து வசூல் செய்வதுடன், அதன் மூலம் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக மாநகராட்சியில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உதவி பொறியாளர் மகாதேவன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story