பட்டதாரி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி


பட்டதாரி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி

கோயம்புத்தூர்

கோவை

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அன்பழகன்(வயது 24). பட்டதாரியான இவர், வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அன்பழகன் தனது முகநூல் பக்கத்திலும் வேலைவாய்ப்பு குறித்து ஏதாவது விளம்பரம் செய்யப்பட்டு உள்ளதா? என்று தேடினார். அப்போது வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஒரு லிங்க் கிடைத்தது. அதை கிளிக் செய்த பிறகு முகநூலில் உள்ள மெசேஜ் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு ஆசாமி, அவரை தொடர்பு கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஆசாமி, தான் அனுப்பும் விளம்பர வீடியோவை பார்த்தால் ஒரு வீடியோவுக்கு ரூ.50 வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

இதை நம்பிய அன்பழகன், அந்த ஆசாமி அனுப்பிய 7 வீடியோக்களை பார்த்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.350 வந்தது.

இதையடுத்து செல்போன் எண்ணை வாங்கி மீண்டும் அன்பழகனை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி, எனது நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதில் மயங்கிய அன்பழகன், அந்த ஆசாமியின் வங்கி கணக்கிற்கு 3 தவணைகளில் ரூ.7 லட்சத்து 53 ஆயிரத்தை தனது தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பினார்.

ஆனால் அதன்பிறகு அந்த ஆசாமி கூறியபடி பணம் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அன்பழகன், அந்த ஆசாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டதாரி வாலிபர் அன்பழகனிடம் பண மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story