ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.7½ லட்சம் நகை-பணம் அபேஸ்


ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.7½ லட்சம் நகை-பணம் அபேஸ்
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.7½ லட்சம் நகை-பணம் மற்றும் செல்போன்களை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

செல்போன் சர்வீஸ் கடை

திருக்கோவிலூர் அருகே உள்ள சீர்பாதநல்லூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி மகன் ராமச்சந்திரன்(வயது 35). சென்னை மேடவாக்கம் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடையை நடத்தி வந்த இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் பண்டிகை முடிந்து ராமச்சந்திரன் நேற்று முன்தினம் காலை திருக்கோவிலூரில் இருந்து அரசு பஸ்சில் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டார். மதியம் சுமார் 1 மணியளவில் முகையூர் அருகே பஸ் வந்தபோது ராமச்சந்திரன் தான் வைத்திருந்த கைப்பையை காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் அபேஸ்

இதையடுத்து பஸ் முழுவதும் தேடி பார்த்தும் பையை காணவில்லை. அதில் 16 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து ராமசந்திரன் அரகண்டநல்லூர் போலீ்ஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பையில் இருந்த ராமச்சந்திரனின் மனைவியின் செல்போன் எண்ணை வைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.7½ லட்சம் நகை-பணம் மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர்கள் அபேஸ் செய்த சம்பவம் அரகண்டநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story