பெண் உள்பட 2 பேரிடம் ரூ.85 ஆயிரம் பறிப்பு


பெண் உள்பட 2 பேரிடம் ரூ.85 ஆயிரம் பறிப்பு
x

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் வங்கியில் பணம் எடுத்து திரும்பிய போது, பெண் உள்பட 2 பேரிடம் ரூ.85 ஆயிரம் பறிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் வங்கியில் பணம் எடுத்து திரும்பிய போது, பெண் உள்பட 2 பேரிடம் ரூ.85 ஆயிரம் பறிக்கப்பட்டது.

பெண்ணிடம் பணம் பறிப்பு

திருச்சி குமரன்நகர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி செல்வி (வயது 43). இவர் நேற்று முன்தினம் ராமலிங்கநகரில் உள்ள கனரா வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அதை ஒரு துணிப்பையில் வைத்து வீட்டுக்கு புறப்பட்டார். வயலூர் ரோட்டில் உள்ள சீனிவாச நகர் பகுதியில் நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த வாலிபர், செல்வி வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அந்தபையில், செல்போன், ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் ரூ.25 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து செல்வி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் செல்வியிடம் பணத்தை பறித்துச்சென்றது திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த சாந்தனு (34) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

முதியவரிடம் ரூ.60 ஆயிரம் வழிப்பறி

திருச்சி கண்டோன்மெண்ட் ராஜாகாலனி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 70). இவர் சம்பவத்தன்று கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் மெயின் கிளைக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரத்தை எடுத்தார். அதை ஒரு பையில் வைத்து கொண்டு வங்கி அருகே ஆட்டோவுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ரவீந்திரனிடம் இருந்து திடீரென பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ரவீந்திரன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


Next Story