சேலத்தில் பூட்டை உடைத்து துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.9½ லட்சம், 10 பவுன் நகை கொள்ளை


சேலத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.9½ லட்சம், 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பு துலங்காமல் இருக்க மிளகாய் பொடியை கொள்ளையர்கள் வீட்டுக்குள் தூவி சென்றுள்ளனர்.

சேலம்

கன்னங்குறிச்சி:

கட்டிட காண்டிராக்டர்

சேலம் கோரிமேட்டை அடுத்த சின்னக்கொல்லப்பட்டி ஜி.கே.வி. நகரில் வசிப்பவர் மீனாட்சி சுந்தரம், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி சுந்தரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

பவுர்ணமியையொட்டி கடந்த 29-ந் ேததி இரவு விழுப்புரம் வக்கிர காளியம்மன் கோவிலுக்கு மீனாட்சி சுந்தரம் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் நேற்று காலை மீனாட்சி சுந்தரமும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.9½ லட்சம் கொள்ளை

இது குறித்து மீனாட்சி சுந்தரம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அனைத்து அறைகள் மற்றும் பீரோக்களும் சாவி போட்டு திறந்தவுடன் மிளகாய் பொடி நெடி வீசியதால் அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மோப்பம் பிடிக்க முடியாமல் திணறியது. அதே நேரத்தில் தடயவியல் நிபுணர்கள், கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர்.

வீட்டில் படுக்கை அறைக்கு சென்று போலீசார் பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் படுக்கையில் கலைந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.9½ லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.

மிளகாய் பொடி தூவிய கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் துப்பு துலங்காமல் இருக்க மிளகாய் பொடியை வீடு முழுவதும் தூவி சென்றுள்ளனர். இந்த ெகாள்ளை குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.


Next Story