கேட்டரிங் உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் பணம், நகை திருட்டு
கேட்டரிங் உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் பணம், நகை திருட்டு
கோவை
கோவையில் கேட்டரிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் பணம், நகை திருட்டு தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேட்டரிங் நிறுவனம்
கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). கேட்டரிங் நிறுவன உரிமையாளர். இவர் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனது நண்பர் நிறைமொழி (35). இவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரும், இவரது மனைவி நிவேதிதாவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தனர். நிறைமொழி மற்றும் அவரது மனைவி நிவேதிதா எனது வீட்டில் தங்க அனுமதி கேட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் எனது வீட்டில் தங்க வைத்தேன். இதனை தொடர்ந்து நான் சாய்பாபாகாலனியில் உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கினேன்.
அமெரிக்க டாலர், நகை மாயம்
இதனிடையே அவர்கள் இருவருடன், எனது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த ரவிக்குமாரையும் தங்க வைத்தேன். இந்த நிலையில் எனது வீட்டை காலி செய்யும்படி கூறினேன். ஆனால்அவர்கள் இருவரும் என்னிடம் கூறாமல் வீட்டை காலி செய்து விட்டு சென்றனர்.
இதையடுத்து எனது படுக்கை அறையில் உள்ள லாக்கரை திறந்து பார்த்தேன். அந்த லாக்கரில் நான் வைத்திருந்த ரூ.4½ லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வைர நகை என ரூ.9 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் மாயமாகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது நிறுவன மேலாளர் ரவிக்குமாரிடம் இதுகுறித்து கேட்டேன். அப்போது அவர் நிறைமொழி கள்ளசாவியை பயன்படுத்தி நகை, பணத்தை எடுத்து விட்டதாக கூறினார். எனவே அவர்கள் 3 பேரும் சேர்ந்து எனது நகை, பணத்தை திருடியதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி மற்றும் போலீசார் நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதா மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.