நெல்லை மார்க்கெட்டுகளில் சதம் அடித்த தக்காளி விலை
நெல்லை மார்க்கெட்டுகளில் நேற்று தக்காளி விலை சதம் அடித்தது.
நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் தற்போது பெரிய அளவில் இல்லை. தற்போது அனல் காற்று வீசுவதால் இலைகள் கருகி, பூக்கள் பூக்காததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இல்லை.
மேலும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி விலை நேற்று சதம் அடித்தது. அதாவது கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. மகாராஜநகர் உழவர் சந்தையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசுவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும் மத்தியபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் தக்காளி தட்டுப்பாடு நிலவுவதால் அவர்கள் கர்நாடக சந்தைகளில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து செல்கிறார்கள். இதனாலும் தமிழகத்துக்கு தக்காளி வரத்து கணிசமாக குறைந்து உள்ளது.
நெல்லை மாவட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 35 டன் தக்காளிகள் வரும். ஆனால் தற்போது 15 டன் தக்காளிகள் மட்டுமே வருகிறது. இதனால் தினசரி சந்தையில் நேற்று முன்தினம் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.100-க்கு உயர்ந்து உள்ளது. மகாராஜநகர் உழவர் சந்தையில் ரூ.48-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது. சின்னவெங்காயம், பல்லாரி, இஞ்சி ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரையும், இஞ்சி ரூ.280-க்கும், மிளகாய் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழை காலம் வரும் வரை இந்த விலை ஏற்றம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.