ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சிங்காநல்லூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
சிங்காநல்லூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்பு நிலம்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் திருச்சி ரோடு சிங்கா நல்லூர் உழவர் சந்தை அருகே சுமார் 6 சென்ட் நிலத்தை ஆக்கிர மித்து சிமெண்டு கடை, அலுவலகம், வீடு கட்டப்பட்டு இருந்தது. இதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரடியாக ஆய்வு செய்து கண்டறிந்தார்.
இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அந்த இடம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது என்பதும், அந்த இடத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
ரூ.2 கோடி நிலம் மீட்பு
உடனே அந்த ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். உடனே ஆக்கிரமிப் பை அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர் வேலுமணிக்கு (வயது 65) நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனால் அவர், அந்த கட்டிடத்திற் குள் இருந்த பொருட்களை தானாகவே அகற்றிக் கொண்டார்.
இந்தநிலையில் நேற்று கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர். பின்னர் அந்த நிலத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.
அபராதம்
இதுபோன்று சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு சாலையை ஆக்கிரமித்து செடிகள் வைத்து சிறிய பூங்கா அமைத்து இருந்தனர்.
இதை அறிந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பூங்காவை அகற்றினர். மேலும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.