ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்


ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்
x

கல்விக்கடனை முழுமையாக செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு செய்ததற்காக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று தனியார் வங்கிக்கு விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சித்தலிங்கமடத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 64), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய மகள் ஸ்ரீபிரியாவின் கல்லூரி படிப்புக்காக கல்விக்கடன் வழங்குமாறு விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வாசுதேவன் விண்ணப்பித்தார். அதற்கு வங்கி அதிகாரிகள், ஒரு வருடத்திற்கு ரூ.35 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம்தான் கல்விக்கடன் வழங்க முடியும் என்றுகூறி அந்த தொகையை 4 தவணையாக வழங்கினார்கள். ஸ்ரீபிரியா படிப்பு முடிந்ததும் வங்கியில் வாங்கிய கல்விக்கடன் முழுவதையும் வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 71-ஐ வாசுதேவன் செலுத்திவிட்டார். கடன் தொகை முழுவதையும் செலுத்தியதற்கான என்.ஓ.சி. சான்றிதழ் தரும்படி வங்கி அதிகாரிகளிடம் வாசுதேவன் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், கல்விக்கடன் தருவதுதான் தங்கள் வேலை, என்.ஓ.சி. சான்றை இங்கு தர முடியாது என்றும் திருச்சி அல்லது புதுச்சேரியில் உள்ள வங்கி கிளையை அணுகுமாறும் வாசுதேவனிடம் கூறியுள்ளனர். அதன்படி வாசுதேவன், புதுச்சேரியில் உள்ள வங்கி கிளைக்கு சென்று சான்றிதழ் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் ரூ.40 ஆயிரம் கட்டினால்தான் அந்த சான்றிதழ் கிடைக்கும் என்று கூறி அழைக்கழித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த வாசுதேவன், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 27.2.2020 அன்று வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளனர். அந்த தீர்ப்பில்,

வாசுதேவன், தனது மகளின் படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை முழுவதுமாக திரும்ப செலுத்திவிட்டதால் அதற்குரிய சான்றிதழை சம்பந்தப்பட்ட விழுப்புரம் வங்கி கிளை மேலாளர் வழங்க வேண்டும். மேலும் வங்கியின் சேவை குறைபாட்டிற்கும், அதன் மூலம் மனுதாரர் வாசுதேவனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.


Next Story