கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்


கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்
x

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நிர்வாகக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர்கள் கலிவரதன், ராஜாராமன், துணை செயலாளர்கள் வெங்கடசாமி, ரங்கநாதன், பாண்டியன், ராஜசேகரன், காத்தவராயன், பெருமாள், சுப்பிரமணி, முத்துநாராயணன், தேவேந்திரன், நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

இக்கூட்டத்தில், 2023-24-ம் ஆண்டு கரும்பு முதன்மை பருவத்திற்கு ஆலை நிர்வாகம் விதை மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை அழிப்பதற்கு கேரளாவில் சட்டம் இயற்றியதுபோல் தமிழக அரசும், சட்டம் இயற்ற வேண்டும். 2023-24-ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு கரும்புக்கு வயல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். வெட்டுக்கூலி உயர்வை ஆலை நிர்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரும்பு வெட்டும் எந்திரம் வாங்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கரும்புக்கான மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்பிற்கு உரிய கிரையத்தொகையை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். கரும்பு விவசாயம் செய்ய ஆலை நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும், 2023-24-ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு விவசாயிகளுக்கு அளிக்கும் ஊக்கத்தொகையை ரூ.500 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story