130 மாணவர்களுக்கு ரூ.5¾ கோடி கல்விக்கடன்


130 மாணவர்களுக்கு ரூ.5¾ கோடி கல்விக்கடன்
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

செம்பனார்கோவிலில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 130 மாணவர்களுக்கு ரூ.5 ¾ கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

ரூ.5¾ கோடி...

செம்பனார்கோவிலிலில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட நிதியியல் கல்வி ஆலோசகர் ஸ்ரீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்கள் அருண் விக்னேஷ், முத்துசாமி, மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராமநாதன், தனியார் கல்வி குழும நிர்வாக இயக்குனர் குடியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட கலெக்டர், 130 பயனாளிகளுக்கு ரூ.5.85 கோடி கடனுதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, மாவட்ட முன்னோடி வங்கியாக இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் கல்விக்கடன், தொழிற்கடன், சுயஉதவிக்குழு கடன், வீட்டுக்கடன், விவசாயக்கடன், தாட்கோ கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி என பல்வேறு திட்டங்களை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இலக்கை தாண்டி கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி அதிக அளவில் வழங்கி நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மற்றும் மாவட்டத் தொழில் மையம் தமிழகத்தில் சிறந்த தொழில் மையமாக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. நீட்ஸ் கடனுதவி திட்டம், அண்ணல் அம்பேத்கர் கடனுதவி திட்டம் ஆகிய திட்டங்களில் இந்த நிதியாண்டின் இலக்கை தற்போதே எட்டிவிட்டோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கடனுதவி வழங்குவதிலும், இலக்கைத் தாண்டிய கடனுதவி வழங்கியுள்ளோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 மாணவர்களுக்கு, கல்விக் கடனுதவி வழங்க இலக்கு தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 130 பயனாளிகளுக்கு ரூ.5.85 கோடி கடனுதவியை அனைத்து வங்கிகளும் இணைந்து வழங்கி உள்ளன. இதுபோன்று தமிழக அளவில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதில் நமது மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story