பெண்ணிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்; நகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது
புதிதாக கட்டிய வீட்டுக்கு வரி விதிப்பு செய்ய பெண்ணிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேவகோட்டை நகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை
புதிதாக கட்டிய வீட்டுக்கு வரி விதிப்பு செய்ய பெண்ணிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேவகோட்டை நகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வரி விதிக்க லஞ்சம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 25-வது வார்டை சேர்ந்தவர் வன்மீகநாதன் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவருைடய அக்காள் மகள் பிரவீனா(22). வன்மீகநாதன் 25-வது வார்டில் சொந்தமாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு வரி விதிப்பு செய்ய கடந்த 40 நாட்களுக்கு முன்பு பிரவீனா நகராட்சி அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தார்.
அந்த வார்டு, பில் கலெக்டரான மதன்குமார் (32), வரிவிதிப்பு செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுத்தால்தான் வரி போட முடியும் என கூறியுள்ளார். அதற்கு பிரவீனா ரூ.15 ஆயிரம் தர முடியாது. ரூ.5 ஆயிரம் வேண்டுமானால் தருகிறேன் என கூறியுள்ளார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்
மதன்குமார் நேற்று மாலை பணத்தை கொண்டு வந்து தரும்படி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரவீனா சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் நேற்று மாலை 4 மணிக்கு மதன்குமாரிடம் லஞ்சமாக ரூ.5 ஆயிரத்தை பிரவீனா கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கிய மதன்குமார், மற்றொரு பில் கலெக்டரான பாண்டித்துரை (40) என்பவரிடம் கொடுத்து மோட்டார் சைக்கிளில் வைக்க கூறினார். அந்த பணத்தை பாண்டித்துரை, நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்டியை திறந்து உள்ளே வைத்துக் கொண்டிருந்தார்.
2 பேர் கைது
அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ்கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பாண்டித்துரையையும், மதன்குமாரையும் கையும் களவுமாக பிடித்தனர். பாண்டித்துரை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர். தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவரான மதன்குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர் ஆவார். இருவரும் வாரிசு அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லஞ்சம் வாங்கியதாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.