கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு


கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 6:45 PM GMT (Updated: 6 Nov 2022 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

அணிவகுப்பு ஊர்வலம்

கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாள் விழா, மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதையொட்டி கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பு சீருடை அணிந்து 300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திரண்டனர். பின்னர் காவிக்கொடிக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அவர்கள் வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரத மாதா உருவ படத்துக்கும் மலர் தூவி தீபாராதனை காண்பித்து வணங்கினார்கள்.

மலர் தூவி வரவேற்பு

இதைத்தொடர்ந்து அணிவகுப்பு ஊர்வலத்தை சதீஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பேண்டு வாத்தியங்களை இசைத்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது வழிநெடுக சாலையோரம் திரண்டு நின்ற பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

சேலம் மெயின்ரோட்டில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கவரைத்தெரு, கிராமச்சாவடி தெரு, சித்தேரித்தெரு, விளந்தாங்கல் சாலை, கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, குளத்து மேட்டுத் தெரு, கடைவீதி வழியாக மந்தைவெளியை சென்றடைந்தது.

பொதுக்கூட்டம்

தொடர்ந்து அங்கு மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சதீஷ்குமார் தலைமை தாங்கினார். செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு செயலாளர் கல்யாண் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் கல்கி.நாராயணன் நன்றி கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு

அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.முருகன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story