ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு


ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீச்சு
x

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

மண்எண்ணெய் குண்டு வீச்சு

சேலம் பொன்னம்மாபேட்டை பரமக்குடி நல்லுசாமி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). சிற்ப கலைஞரான இவர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று அதிகாலை இவருடைய வீட்டின் அருகில் தெரு நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கதவை திறந்து வெளியே எட்டி பார்த்தனர்.

அப்போது ராஜன் வீட்டின் அருகே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து யார் நீங்கள்? என்று கேட்டு சத்தம் போட்டனர். அப்போது வாலிபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலை எடுத்து அதில் தீ பற்ற வைத்து ராஜன் வீட்டு முன்பு எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆனால் அந்த மண்எண்ணெய் குண்டு வெடித்து, தீப்பிடிக்க வில்லை. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

தனிப்படை போலீசார்

சத்தம் கேட்டு ராஜன் வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மண்எண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு உடைந்து கிடந்த பாட்டில் துகள்களை ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ராஜன் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பின்னர் மண்எண்ணெய் குண்டு வீசியவர்களை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர்கள் சரவணக்குமார், நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மண்எண்ணெய் குண்டு வீசிவிட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

2 பேர் கைது

இதையடுத்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சையத்அலி (33), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த காதர் உசேன் (42) ஆகிய 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மண்எண்ணெய் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து தீ வைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தல், நற்பெருக்கு களங்கம் விளைவித்தல், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதில் சையத்அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேலம் மாவட்ட தலைவராகவும், காதர் உசேன் 34-வது வார்டு கிளை தலைவராகவும் உள்ளனர். மேலும் சிலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், முஸ்லிம் அமைப்பினர் உள்பட பலர் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு கூடினர். அவர்கள் போலீஸ் உதவி கமிஷனர் மாடசாமி மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பின்னர் திடீரென்று அவர்கள் அம்மாபேட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆரீப் என்பவரை விடுவிக்ககோரி சேலம் கிச்சிப்பாளையம் கரீம் காம்பவுண்டு அருகே முஸ்லிம் அமைப்பினர் மற்றும் தோழமை கட்சியினர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா நேற்று மதியம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜன் வீட்டின் முன்பு மண்எண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் மண்எண்ணெய் குண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

பரபரப்பு

மாநகர் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி பா.ஜனதா கட்சி பிரமுகர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநகர் பகுதி முழுவதும் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தை சேர்ந்த ஷெரீப்பாஷா, முகமது ரபி, முகமது இஸ்மாயில், முகமது ஆரிப், காஜா உசேன் ஆகிய 5 பேரை கைது செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மண்எண்ணெய் குண்டு வீசியது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என மொத்தம் 7 பேர் கைது செய்ததை கண்டித்து 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் நேற்று சேலம் மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story