தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம், ராஜராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 63). இவர், தாம்பரம் பகுதி ஆர்.எஸ்.எஸ். தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்

நேற்று அதிகாலையில் இவரது வீட்டின் வராண்டாவில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சீதாராமன், வெளியே வந்து பார்த்துபோது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் வராண்டாவில் தீப்பிடித்து எரிந்தது. சீதாராமன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த சிட்லப்பாக்கம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், சீதாராமன் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்செல்வதும், பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்து எரியும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தாம்பரம் அருகேயும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story