ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தி.மு.க. தான் வளர்க்கிறது
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தி.மு.க. தான் வளர்க்கிறது
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தி.மு.க. தான் வளர்க்கிறது என்று தஞ்சையில் நடிகை கஸ்தூரி கூறினார்.
நடிகை கஸ்தூரி பேட்டி
தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திரைப்பட நடிகை கஸ்தூரி நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரை சந்தித்து மாநகராட்சி செயல்பாடுகளை பாராட்டினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களின் வரிப்பணத்தில்...
தமிழக அரசு, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்த போது அதனை முதலில் வரவேற்றவர்களில் நானும் ஒருவர். பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் நல்ல திட்டம். அதை தி.மு.க. அமைச்சர் கொச்சையாக பேசி இருக்க கூடாது.
அரசு எந்த விஷயத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
பெண்களை மதிக்கும் வகையில்...
இந்த நிலையில், ஓசி பஸ் என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியது மிகப்பெரிய தவறு. அமைச்சர் பொன்முடி எப்போதும் உடைத்து பேசக்கூடிய நபர். அதே நேரத்தில் அவர் பேசியதை நியாயப்படுத்த முடியாது. ஓசி பயணம் என சொல்லாமல் இலவசம் என கூறி இருக்கலாம். ஓசி பஸ் என பெண்களை கூறும் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும் பெண் வயிற்றில் ஓசியில் இருந்து பிறந்தவர்கள் தான். அதற்காக பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான் அமைச்சர்கள் பேச வேண்டும். பெண்களை உதாசீனம் செய்வது போல பேச கூடாது.
தி.மு.க. தான் வளர்க்கிறது
ஒரு விஷயத்தை முடக்கி வைக்கும்போதும், எதிர்க்கும்போதும் அந்த விஷயம் வேகமாக வளரும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி தமிழக மக்கள் பலருக்கும் தெரியுமோ, தெரியாதோ?.
ஆனால் தி.மு.க. வின் இது போன்ற செயலால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வளர்த்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். என்ற மூன்று எழுத்து, தி.மு.க. என்ற மூன்று எழுத்தால் தான் வளர்கிறது.
ஆட்சியை பாராட்டலாம்
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு நல்ல விஷயங்களை செய்தார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அதே போன்று திட்டங்களை தடாலடியாக செய்வார் என நினைத்தேன். நினைத்த அளவிற்கு இல்லை.
இருப்பினும் ஓரளவிற்கு மக்களுக்கான திட்டங்களை நன்றாக செயல்படுத்துகிறார். ஆனால் ஸ்டாலின் நினைப்பது போல மற்றவர்கள் செயல்படுகிறார்களா? என்பதில் ஒரு புள்ளி இருக்கிறது. செயல் அதிகம், பேச்சு குறைவு என இருந்தால் தி.மு.க. ஆட்சியை பாராட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.