புதுப்பெண் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை
குமரிக்கு கணவருடன் சுற்றுலா வந்த புதுப்பெண் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
அருமனை,
குமரிக்கு கணவருடன் சுற்றுலா வந்த புதுப்பெண் சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
எம்.காம் பட்டதாரி
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார், சிவில் என்ஜினீயர். இவருக்கும் கிருபா (வயது25) என்ற எம்.காம் பட்டதாரிக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து தினேஷ்குமார் மனைவியுடன் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் கடந்த 11-ந் தேதி அருமனை அருகே உள்ள களியல் சிற்றாரில் சொகுசு விடுதியில் வந்து தங்கினர். மறுநாள் மதியம் தம்பதியர் சாப்பிட்டுவிட்டு விடுதியில் ஓய்வெடுத்தனர். அப்போது புதுப்பெண் கிருபாவுக்கு திடீரென நெஞ்சுவலியுடன் மயக்கம் ஏற்பட்டது. உடனே தினேஷ்குமார் அவரை மீட்டு விடுதி ஊழியர்கள் உதவியுடன் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பரிதாப சாவு
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கிய சிறிது நேரத்தில் கிருபா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தினேஷ்குமார் கரூரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே இருவரது உறவினர்களும் கரூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் குலசேகரம் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் தினேஷ் குமார் நடந்த சம்பவத்தை விவரித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையல் போலீசார் விரைந்து வந்து தினேஷ்குமார் மற்றும் சொகுசு விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது கிருபாவுக்கு ஏற்கனவே நோய் பாதிப்பு இருந்ததாகவும், அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் உறவினர்கள் கூறினர். மேலும் கிருபாவின் தந்தை தண்டபாணி மற்றும் உறவினர்கள் புதுப்பெண் சாவில் சந்தேகமில்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதற்கிடையே கிருபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் திருமணமான 2½ மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்ததால் நேற்று நாகர்கோவில் ஆ.டி.ஓ. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.