சிதிலமடைந்த பழங்கால கோவில் சீரமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தினத்தந்தி 30 May 2023 2:30 AM IST (Updated: 30 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் பழங்கால பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே சிதிலமடைந்து காணப்படும் பழங்கால பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழங்கால கோவில்

ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பழங்கால பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கோவில் முழுமையும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவில் சுவர்களிலும், கோபுரங்களிலும், கல்தூண்களிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு சமீபத்தில் ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த கோவில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் எந்த மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது? என்பது தெரியவில்லை. மேலும் கோவில் உள்பகுதியில் சில கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் கோவில் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவற்றை உள்ளே சென்று படிக்க முடியவில்லை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சீரமைக்க கோரிக்கை

பழமையான இந்த கோவிலில் ஆண்டிப்பட்டி, தெப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இன்றளவும் வழிபாடு செய்து வருகின்றனர். கோவில் கட்டிடம் சேதமடைந்துள்ளதால் கோவில் கருவறையில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை மட்டும் கோவிலுக்கு வெளிப்பகுதியில் சிறிய அளவில் கட்டிடம் கட்டி வைத்து வணங்கி வருகின்றனர்.

அதேநேரத்தில் நூற்றாண்டுகளை கடந்த கோவில் பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிதிலமடைந்த இந்த கோவிலை புனரமைக்க வேண்டும். அதேபோல் கோவில் குறித்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அப்போது பழங்கால மக்களின் வாழ்க்கை முறை, எந்த மன்னரால் இந்த கோவில் கட்டப்பட்டது? என்பது குறித்து தெரியவரும். எனவே தமிழக அரசு இந்த கோவிலை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story