அரசு குடியிருப்பில் தங்காத தாசில்தார்கள்-பேய் உலவி வருவதாக வதந்தி


அரசு குடியிருப்பில் தங்காத தாசில்தார்கள்-பேய் உலவி வருவதாக வதந்தி
x

கலசபாக்கம் தாலுகா அலுவலகம் உருவாகி 11 ஆண்டுகள் ஆகி 14 தாசில்தார்கள் மாறியும் எந்த ஒரு தாசில்தாரும் அரசு குடியிருப்பில் இது வரை தங்காமல் புறக்கணித்து வருகின்றனர். பேய் உலா வருவதாக வதந்தி பரவுவதே இதற்கு காரணம் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் தாலுகா அலுவலகம் உருவாகி 11 ஆண்டுகள் ஆகி 14 தாசில்தார்கள் மாறியும் எந்த ஒரு தாசில்தாரும் அரசு குடியிருப்பில் இது வரை தங்காமல் புறக்கணித்து வருகின்றனர். பேய் உலா வருவதாக வதந்தி பரவுவதே இதற்கு காரணம் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனி தாலுகா

கலசபாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் புதிதாக அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளில் தற்போது வரை 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால் இந்த குடியிருப்பில் எந்த ஒரு தாசில்தாரும் தங்கியது இல்லை. பகல் நேரங்களில் மட்டும் ஒரு சில அரசு விழா காலங்களில் மட்டுமே உணவு சாப்பிடுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் குடியிருப்பில் யாரும் இதுவரை இரவு தங்கியது இல்லை. இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவுவதே காரணம் என கூறப்படுகிறது.

மேலும் பாம்புகளும் நடமாடுகின்றன. இதனால் அந்த குடியிருப்பில் எந்த அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த கட்டிடம் கட்டி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எந்த அதிகாரியும் குடும்பத்துடன் தங்கவில்லை. ஒரு சில தாசில்தார் மட்டும் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சென்று விடுவார். அதன் பின்னர் யாரும் வருவதில்லை. அதிகாரிகளுக்கு பணி சுமை அதிகரித்து இரவு நீண்ட நேரம் ஆனாலும் யாரும் இங்கு தப்பி தவறி கூட தங்குவதில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.

குடியிருப்புக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இதனால் பேய் பீதியில் இரவு நேரங்களில் இங்கு நாங்கள் யாரும் செல்வதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை

மக்கள் பணியை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் பணியிடத்திலேயே அதிகாரிகள் தங்குவதற்கு குடியிருப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு கலசபாக்கத்தில் தாசில்தார் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 11 ஆண்டுகள் ஆகி 14 தாசில்தார்கள் இங்கு வந்தும் ஒருவரும் தங்காதது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே இனி வரும் காலங்களில் இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Next Story