சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1.60 கோடி மோசடி-2 பேர் மீது வழக்கு


சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1.60 கோடி மோசடி-2 பேர் மீது வழக்கு
x

சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1.60 கோடி மோசடி செய்த புகாரில் 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்

நிதி நிறுவனம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஜீவா நகர் காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). தையல் தொழிலாளி. இவருக்கு தொழில் ரீதியாக ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும், சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் என்ற முறையில் மதுரை மேலமடை காந்திநகரை சேர்ந்த வெள்ளைச்சாமியும் அறிமுகம் ஆனார். அப்போது அவர்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் 25 சதவீத லாபம் கிடைக்கும் என்று முருகேசனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய முருகேசன் முதல் கட்டமாக கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி ரூ.1 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். அதற்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கான பணத்தை முருகேசனுக்கு கொடுத்தனர்.

ரூ.1.60 கோடி மோசடி

இதேபோல், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 சதவீதம் கமிஷன் தொகை தருவதாக சிவக்குமார், வெள்ளைச்சாமி ஆகியோர் கூறியதால் சேலம், ஆத்தூர், பேளுக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களிடம் முருகேசன் ரூ.1 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 200-ஐ வசூலித்து அதை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி 25 சதவீதம் லாபத்தொகையை மாதந்தோறும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதனால் கட்டிய பணத்தை பலமுறை திருப்பி தருமாறு கேட்டும் அவர்கள் திருப்பி தராமல் மோசடி செய்து வந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முருகேசன் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் சிவக்குமார், வெள்ளைச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story